கனடியர்களுக்கு இந்த ஆண்டில் வழங்கப்படும் வரி சலுகை
கனடாவில் 2025 ஆண்டிலிருந்து புதிய “நடுத்தர வர்க்க வரி குறைப்பு” நடைமுறைக்கு வருகிறது.
கடந்த ஜூன் மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட இந்த மாற்றத்தின் கீழ், ஆண்டுக்கு 57,375 டாலர் அல்லது அதற்கு குறைவாக வருமானம் பெறுவோருக்கான தனிநபர் வருமான வரி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
2025 வரி ஆண்டிற்கு குறைந்த வருமான வரி விகிதம் 14.5 சதவீதமாகவும் 2026 மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கு 14 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த வரி விகிதம் 15 சதவீதமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் கணிப்பின்படி, இந்த வரி குறைப்பு நடவடிக்கையால் சுமார் 2.2 கோடி கனடியர்கள் பயனடைவார்கள்.
இதன் மூலம், ஒருவருக்கு அதிகபட்சமாக 420 டாலர் வரை, இருவர் வருமானம் பெறும் குடும்பத்திற்கு 840 டாலர் வரை வரிச் சேமிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை, வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வரும் சூழலில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட கனடியர்களின் பொருளாதார சுமையை ஓரளவு குறைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.