புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் பாரிய தீ விபத்து! 5 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த விடுதியில் திடீரென பாரிய தீ விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (29-06-2024) பாலாஷிகா நகரில் இடம்பெற்றுள்ளது.
ரஷ்யாவில் மாஸ்கோ புறநகர்ப் பகுதியான பாலாஷிகா நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில், வெளிநாடுகளைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர்.
அந்த விடுதியில் நேற்று திடீரென தீப்பிடித்தது. பின்னர் தீ மளமளவென கட்டிடத்தின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சி அளித்தது.
கட்டிடத்தில் தீப்பிடித்ததால் மாடியில் தங்கியிருந்த பலரும் உயிர் பயத்தில் ஜன்னல் வழியாக குதித்தனர். இதில் சிலருக்கு படுகாயம் ஏற்பட்டது.
தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர்.
அவர்களது சில மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மற்றொருபுறம் அந்த விடுதியில் சிக்கியவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றது.
அதன்படி ஏணி மூலம் மீட்பு படையினர் ஏறிச்சென்று அங்கிருந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் 5 பேர் உடல் கருகி பலியாகினர். சிலர் காயமடைந்தனர்.
இது தொடர்பில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.