உக்ரைன் மீது 120 ஏவுகணைகளை சரமாரியாக வீசிய ரஷ்யா!
உக்ரைன் மீது ரஷ்யா வீசிய ஏவுகணை மழையால் அந்நாடு குலுங்கியுள்ளது. 120 ஏவுகணைகள் வீசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது அண்மை காலமாக ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை தீவிரப்படுத்தி உள்ளது.
இதனால் அந்த நாடு கடும் மின்வெட்டுகளால் அல்லலுற்று வருகிறது. லிவிவ் நகரின் 90 சதவீத பகுதிகள் இருளில் தத்தளிப்பதாக அதன் மேயர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) ஆலோசகர் மைக்கைலோ போடோல்யாக் கூறும்போது,
" உக்ரைன் மக்கள் மீதும், உள்கட்டமைப்புகள் மீதும் குறி வைத்து 120 ஏவுகணைகளை ரஷ்யா வீசியது. தலைநகர் கீவில் ஏவுகணை தாக்குதலில் சிக்கி படுகாயம் அடைந்த 14 வயது சிறுமி உள்பட 3 பேர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டனர்" என தெரிவித்தார்.
கார்கிவ், ஒடேசா, லிவிவ், ஜைட்டோமிர் நகரங்களிலும் ஏவுகணைகள் விழுந்தன. வான் மற்றும் கடல் வழிதாக்குதல் ஒடேசா பிராந்திய தலைவர் மாக்சிம் மார்செங்கோ, "மிக பயங்கரமான ஏவுகணை தாக்குதல் உக்ரைன் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
ஒடேசா பிராந்தியத்தில் 21 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. அதன் சிதைவுகள், குடியிருப்புகள் மீது விழுந்தன. இருப்பினும் பலி ஏதும் இல்லை" என தெரிவித்தார்.