ஐரோப்பாவிற்கு கிடையாது; முற்றாக சேவையை நிறுத்திய ரஷ்யா
ஐரோப்பாவிற்கான எரிவாயு விநியோகத்தை பழுதுபார்ப்பு தேவை என கூறி, ரஷ்யா முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
ரஷ்ய அரசாங்கத்துக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோம், நோர்ட் ஸ்ட்ரீம்- 1 குழாய்த் திட்டம் மீதான கட்டுப்பாடுகள், அடுத்த மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என கூறியுள்ளது.
எரிசக்தி விநியோகத்தைப் ஆயுதமாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
அதேசமயம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரான போர் ஆயுதமாக எரிசக்தி விநியோகத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் (Vladimir Putin) செய்தித் தொடர்பாளர், பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் தொழில்நுட்ப சிக்கல்கள் தான் ரஷ்யாவை குழாய் வழியாக எரிவாயு வழங்குவதைத் தடுக்கும் ஒரே விடயம் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே குறைக்கப்பட்ட விநியோகம்
அதேவேளை ரஷ்யா ஏற்கனவே குழாய் வழியாக எரிவாயு விநியோகத்தை கணிசமாகக் குறைத்துள்ளதுடன் பழுதுபார்ப்பதற்காக, ஜூலையில் 10 நாட்களுக்கு எரிவாயு குழாய் மூடப்பட்டு மீண்டும் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், 20 சதவீத திறனில் இயங்கிய நிலையில் தற்போது அது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 குழாயத் திட்டம், பால்டிக் கடலின் கீழ் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு அருகிலுள்ள ரஷ்ய கடற்கரையிலிருந்து வடகிழக்கு ஜேர்மனி வரை 1,200 கிமீ (745 மைல்கள்) நீண்டுள்ளது.
இது 2011ஆம் ஆண்டு திறக்கப்பட்டதுடன், இதனூடாக ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 170 மில்லியன் கன மீட்டர் எரிவாயுவை அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.