நேட்டோக்கு ரஷியா விடுத்த கடும் எச்சரிக்கை
உக்ரைனுக்கு போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.
ரஷியாவுக்கு உக்ரைனும் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், உயிர்சேதங்களும் அதிகமாக உள்ளன. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று வெளியிட்ட தகவலின் படி, ரஷிய வீரர்கள் 4,500 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷியா இணங்கி வந்துள்ளது. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷியாவை இறங்கி வரச்செய்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக பெலாரஸ் நாட்டில் உள்ள ஹோமெல் நகருக்கு ரஷிய தூதுக்குழு வந்து சேர்ந்து விட்டதாகவும் ரஷிய அதிபர் மாளிகை சொல்கிறது. உக்ரைன் தூதுக்குழுவும் பெலாரஸ் எல்லை வந்துவிட்டதாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் உக்ரைனுக்கு போர் விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்க நேட்டோ கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.
இது குறித்து ஐரோப்பிய யூனியன் வெளியுறவு கொள்கை தலைவர் ஜோஷப் போர்ரெல் கூறுகையில், கீவ் நகரில் ரஷிய படையினருக்கு எதிராக போராடும் வீரர்களுக்கு ஐரோப்பிய யூனியன் போர் விமானங்கள் வழங்கும்” என்றார்.
ஆனால், உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் நேட்டோவின் முடிவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய யூனியன், ரஷியாவுக்கு விரோதமான வகையில் செயல்படுவதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.