அப்பாவி மக்களை கொல்லும் ரஷ்யா; உக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை!
ரஷ்யாவின் தாக்குதலில் உக்ரைனில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) உலகளாவிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் ரஷ்யாவை தடை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மாஸ்கோ தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு தண்டனையாக வெளிநாட்டு விமான நிலையங்கள் அல்லது துறைமுகங்களைப் பயன்படுத்தும் ரஷ்ய விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கு உலகளாவிய தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் திங்களன்று கோரினார்.
அத்துடன் "ரஷ்ய ஏவுகணைகள், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களுக்கு வானத்தை முழுவதுமாக மூடுவதைக் கருத்தில் கொள்ளுமாறு" சர்வதேச நாடுகளை செலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி"அனைத்து துறைமுகங்கள், அனைத்து கால்வாய்கள் மற்றும் உலகின் அனைத்து விமான நிலையங்களிலும் ரஷ்யாவிற்கான நுழைவை நாம் தடை செய்ய வேண்டும்" என அவர் கூறினார்.
உக்ரைன் மீது அழுத்தம் கொடுப்பதற்காக உக்ரைன் நகரங்கள் மீது ரஷ்யா அப்பாவி மக்கள் மீது குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திவருவதாக செலென்ஸ்கி குற்றம்சுமத்தினார்.
நேற்று மாலை பேச்சுக்கள் முறிவடைவதற்கு சற்று முன்பு, விரைவில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடத்த ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஒப்புக்கொண்டார்.
அதற்கு முன்பாக, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுடன் (Emmanuel Macron) தொலைபேசி அழைப்பில் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தனது முன்நிபந்தனைகளையும் புடின் முன்வைத்தார்.
இதன்போது, கிரிமியா மீதான ரஷ்ய இறையாண்மையை அங்கீகரிப்பது, உக்ரேனிய இராணுவத்தை அகற்றி அதன் நடுநிலை நிலையை உறுதி செய்தல் உட்பட ரஷ்யாவின் சட்டபூர்வமான பாதுகாப்பு நலன்களை நிபந்தனையின்றி கணக்கில் எடுத்துக் கொண்டால் மட்டுமே தீர்வு சாத்தியமாகும் என்றும் புடின் கூறினார்.
உரையாடலின் போது சண்டை தொடர்ந்து சீற்றமாக இருந்ததுடன் , உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவில் ரஷ்ய தாக்குதல்களால் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் தொடர்பில் உக்ரைனின் கூற்றுப்படி, ரஷ்ய படையெடுப்பின் போது இதுவரை 14 குழந்தைகள் உட்பட 350-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளை , ஐந்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.