ரஷ்யாவின் மிகப்பெரிய மோசடி மையம் மீது சோதனை
ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளில் 100,000 பேரை ஏமாற்றிய ஒரு மோசடி அழைப்பு மையத்தை சோதனை செய்ததாக ரஷ்யாவின் ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (FSB) இன்று (10) தெரிவித்துள்ளது.
உளவுத்துறை நிறுவனத்தால் பகிரப்பட்ட காணொளியில், முகமூடி அணிந்த முகவர்கள் வணிக மையத்தில் நுழைந்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஊழியர்களை சுற்றி வளைத்து, கால் சென்டரில் உள்ள கணினிகள் உள்ளிட்ட ஏனைய அமைப்புக்களை ஆய்வு செய்வதைக் காட்டியது.
இந்த மையம் ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, கனடா, பிரேசில், இந்தியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளின் குடிமக்களுக்கு எதிராக முதலீட்டு ஒப்பந்தங்கள் என்ற போர்வையில் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ள சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வளையத்தின் ஒரு பகுதியாகும் என்று FSB கூறியது.
அதன் சட்டவிரோத நடவடிக்கைகளின் மூலம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாய் அன்றாடம் ஈட்டப்பட்டதாகவும் விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்த சோதனையின் போது, இஸ்ரேலிய-உக்ரேனிய குடிமகன் கெசெல்மன் யா டி உட்பட பல முக்கிய செயற்பாட்டாளர்களை FSB கைது செய்தது. அதே நேரத்தில் இஸ்ரேலிய-ஜார்ஜிய குடிமகன் டோட்வா டி தப்பியோடியுள்ளார்.
இவர்கள் இருவரும் இந்த நடவடிக்கையை திட்டமிட்டதாகவும், ரஷ்யாவில் தவறான பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்களை பரப்புவதில் தொடர்பு கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. சோதனையில் கைது செய்யப்பட்ட 11 பேர் குற்றவியல் குழுவை ஏற்பாடு செய்தமை, பயங்கரவாதத்தின் தவறான அச்சுறுத்தல் மற்றும் பெரிய அளவிலான மோசடி ஆகிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக ரஷ்யாவின் FSB குறிப்பிட்டுள்ளது.