சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறும் ரஷ்யா?
கடந்த 1998ல் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 11 நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கும் திட்டத்தை ஆரம்பித்தன.
பூமியில் சிறிது துாரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில், உறுப்பு நாடுகள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ரோஸ்காஸ்மோசின் டைரக்டர் ஜெனரல் யூரி போரிசோவ், 2024க்குப் பின் சர்வதேச விண்வெளி திட்டத்தில் இருந்து ரஷ்யா வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளார்.
சமீபத்தில் அமெரிக்கா - ரஷ்யா இடையே விண்வெளி வீரர்கள் பரஸ்பர விண்கலங்களில் பயணிப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்ட நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, 'ஒப்பந்த முறிவு தொடர்பான அறிக்கை எதுவும் ரஷ்யாவிடம் இருந்து வரவில்லை' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'நாசா' தெரிவித்துள்ளது.
வரும் 2030 வரை சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படும் எனவும் நாசா கூறியுள்ளது. இந்த விண்வெளி நிலையத்தின் இயக்கத்தில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு சம பங்கு உள்ளதால், ரஷ்யா சுலபமாக பிரிந்து செல்ல முடியாது.
ரஷ்யா, அதன் இரு நிறுவனங்கள் மீது அமெரிக்கா விதித்துள்ள தடையை நீக்கினால், தன் முடிவை மாற்றிக் கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.