ரஷியா - உக்ரைன் பேச்சுவார்த்தை ஆரம்பம்; போர் முடிவுக்கு வருமா ? பெரும் எதிர்பார்ப்பில் உலக நாடுகள்
ரஷியா - உக்ரைன் இடையே கடந்த 5வது நாளாக போர் நடந்து வருகின்ற நிலையில், இதனை முடிவுக்கு கொண்டுவருவதற்காக பெலாரஸ் நாட்டின் எல்லையில் உள்ள கோமல் நகரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
உக்ரைன் மீதான ரஷிய போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதுதான் உலக நாடுகளின் விருப்பமாக உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்கு, சமரச பேச்சுவார்த்தைக்குத்தான் உண்டு.
இதன்படி போரைத்தொடங்கி வீறுகொண்டு நடத்தினாலும், சமரச பேச்சு நடத்த ரஷியா இணங்கி வருகிறது. பல்வேறு நாடுகளின் பொருளாதார தடைகளும், உள்நாட்டில் இருந்து வருகிற அழுத்தங்களும் ரஷியாவை இறங்கி வரச்செய்துள்ளது.
பேச்சுவார்த்தைக்காக இரு நாட்டு குழுவினரும் பெலாரஸ் வருகை தந்தனர்.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ரஷியா - உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை தொடங்கியதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
உக்ரைன் மீது 5-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால், இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று போர் முடிவுக்கு வருமா? என உலக நாடுகள் ஆவலோடு எதிர்பார்த்து உள்ளன.