ரஷ்யா- உக்ரைன் யுத்தம்; நாட்டை காக்க களத்தில் இறங்கிய பிரபலங்கள்!
ரஷ்யா- உக்ரைன் இடையே நடைபெற்றுவரும் போரில் தனது தாய்நாட்டை பாதுகாப்பதற்காக உக்ரைனின் உலக அழகி அனஸ்டாசியா லென்னா கையில் ஆயுதம் ஏந்தியுள்ளார். \
ரஷ்யா இன்று ஐந்தாவது நாளாக உக்ரைனின் தலைநகர் கிளிவ் நகரை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலை எதிர்த்து போராடி, தாய்நாட்டை பாதுகாப்பதற்காக பாலின பாகுபாடுகள் எதுவும் இல்லாமல் அனைவரையும் போருக்கு வருமாறு உக்ரைன் நாட்டு ஜனாதிபதி வோலோடிமர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் ஜனாதிபதியின் (Volodymyr Zelenskyy) கோரிக்கையை ஏற்று உக்ரைன் நாட்டு சார்பாக 2015 ஆம் ஆண்டு மிஸ் கிராண்ட் சர்வதேச அழகுப் போட்டியில் பங்குபெற்ற அனஸ்டாசியா லென்னா கையில் துப்பாக்கியை ஏந்தியுள்ளார்.
ராணுவ உடை, கையில் துப்பாக்கி உடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள அவர், உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு வரும் அனைவரும் சுட்டுவீழ்த்தப்படுவர் என பதிவிட்டு எச்சரித்துள்ளார்.
அதேவேளை உக்ரைன் நாட்டின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெயரை பெற்ற ஸ்வியாடோஸ்லாவ் யுராஷ் என்பவரும் தனது பங்கிற்கு கையில் துப்பாக்கி ஏந்தி நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதைப்போலவே உக்ரைன் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று ஒற்றைக் காலை இழந்து தவித்த ஒருவரும் போருக்காக செயற்கைக் கால்களை பொருத்தி கொண்டு உள்நாட்டு பாதுகாப்பு படையில் இணைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.