இடிந்து விழுந்த பாடசாலைக் கூரை 27 சிறுவர்கள், ஆசிரியர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள பாடசாலையொன்றின் கூரை வியாழக்கிழமை (15) காலை இடிந்து விழுந்ததில் 27 சிறுவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்ததோடு, மேலும் பலர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெஷாவர் நகரில் உள்ள இந்த இரண்டு மாடிக் கட்டடத்தின் கூரை பலத்த மழை காரணமாக இடிந்து விழுந்ததாகவும் இடிபாடுகளுக்குள் சிறுவர்கள் சிக்கியிருப்பதாகவும், அவர்களை மீட்டெடுக்க மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்துள்ளதோடு, அவர்கள் பெஷாவரில் உள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது.
தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தபட்சம் 14 பிறந்த பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தினை தொடர்ந்து சில வாரங்களிலேயே இந்தப் பாடசாலையின் கூரை இடிந்து விழுந்துள்ளது.
பாகிஸ்தானில் மோசமான கட்டுமானத் தரநிலைகள் மற்றும் பலவீனமான பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இதுபோன்ற கட்டட விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.