பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கொலைவெறி தாக்குதல்... சிக்கிய இன்னொருவர்
ரெக்ஸ்டேல் பகுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் இரண்டாவது நபரை கைது செய்துள்ளதாக ரொறன்ரோ காவல்துறைத் தலைவர் ஜேம்ஸ் ராமர் தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை Tandridge Crescent மற்றும் பைங் அவென்யூ அருகே குடியிருப்பு வளாகம் ஒன்றில் விமரிசையான பிறந்தநாள் கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் போதே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இரு இளைஞர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதமே துப்பாக்கிச் சூடுக்கு காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார் காவல்துறைத் தலைவர் ராமர்.
இதில் நால்வர் காயமடைந்தனர். 11 வயது சிறுவன் மற்றும் ஒரு வயது குழந்தை காயம் குணமடைந்த நிலையில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளனர்.
5 வயது சிறுமிக்கு தலையில் குண்டு பாய்ந்துள்ளதால், அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளார். காலில் குண்டடிப்பட்டு 24 வயது இளைஞரும் சிகிச்சையில் உள்ளார்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் இந்த 24 வயது இளைஞரே முதலில் துப்பாக்கியால் சுட்டவர்களில் ஒருவர். பொலிசார் இவரை அடையாளம் கண்டுள்ளதுடன், இவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கைதான இன்னொருவர் 21 வயதான ரொறன்ரோவை சேர்ந்த Kevin George என்பவர். இவருக்கும் தற்போது குண்டடிப்பட்டு சிகிச்சையில் இருக்கும் இளைஞருக்குமே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இவர் மீதும் தற்போது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. மேலும், பலர் இச்சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது.
அவர்கள் சட்டத்தரணிகளின் உதவியுடன் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என காவல்துறைத் தலைவர் ராமர் அறிவுறுத்தியுள்ளார்.