மத்திய கிழக்கில் பாதுகாப்பு அச்சுறுத்தல்; அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை
மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அமெரிக்க தூதரகங்கள் மற்றும் வெளியுறவுத்துறை பாதுகாப்பு எச்சரிக்கைகளை விடுத்துள்ளன.
இதன்படி, லெபனான், ஈராக், ஈரான், காசா, சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறும், அங்கு ஏற்கனவே வசிக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான முறையில் வெளியேறுவது குறித்து பரிசீலிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, லெபனான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளுக்கு "பயணம் செய்ய வேண்டாம்" என அமெரிக்க வெளியுறவுத்துறை கடுமையான பயண ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
மேலும், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஓமன், கட்டார், குவைத் மற்றும் ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளுக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறும் அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் காரணமாக ஏவுகணை மற்றும் ஆளில்லா வானூர்தி தாக்குதல்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள் மற்றும் வானூர்தி போக்குவரத்து இடையூறுகள் ஏற்படக்கூடும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.