அடிக்கடி சம்பளம் தாமதமானால்... பெரும்பாலான கனேடியர்கள் மன நிலை இதுதான்
தங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் சம்பளம் அடிக்கடி தாமதமானால் பெரும்பாலான கனேடியர்கள் வேறு நிறுவனத்திற்கு மாறுவார்கள் என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.
சம்பளம் தொடர்ந்து மாறுபட்டால் 91 சதவீதம் கனேடியர்கள் புதிய வேலையை தேடிக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் தங்கள் ஊதியம் மாற்றப்படுவதையோ, தாமதப்படுத்தப்படுவதையோ அல்லது சமரசம் செய்வதையோ வழக்கமான அடிப்படையில் கண்டால், நிறுவனங்களுக்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்றே ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆய்வில் பங்கேற்றவர்களில் 64 சதவீதம் பேர் தங்கள் நிறுவனத்தை பெரிதாக நம்புவதில்லை என குறிப்பிட்டுள்ளனர். 59 சதவீதம் பேர் தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் இணைய வேண்டாம் என தங்களுக்கு அறிமுகமானவர்களை எச்சரிப்பதாக தெரிவித்துள்ளனர்.
51 சதவிகிதத்தினர் தங்கள் நிறுவனம் தங்களை எவ்வளவு மதிக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர். சம்பளம் தாமதமாதல், அல்லது தவறாக கணக்கிடுதல் உள்ளிட்டவையால் சிக்கலை எதிர்கொண்ட 38 சதவீதத்தினர் தங்கள் தனிப்பட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறியதாக தெரிவித்துள்ளனர்.
இதனால், 26 சதவீதத்தினர் தங்கள் முழு பங்களிப்பையும் செலுத்த தயக்கம் காட்டியதாகவும், 27 சதவீதத்தினர் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.