பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரம்; நாளாந்தம் 1,000 பேர் பாதிப்பு
பங்களாதேஷில் தட்டம்மை நோய் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுவரை ஒரு கோடியே 98 இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள போதிலும், நாளாந்தம் புதிதாக சுமார் 1,000 பேருக்கு தட்டம்மை நோய்க்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளாந்தம் புதிதாக சுமார் 1,000 பேருக்கு தட்டம்மை
எதிர்வரும் 26ஆம் திகதி முதல் தடுப்பூசி செலுத்தத் தவறிய அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை ஒரு இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 ஆண்டில் உலகளவில் அதிகளவான தட்டம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ள நாடுகளில் பங்களாதேஷும் ஒன்றாகியுள்ளது. அதிக மக்கள் தொகை நெருக்கம் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளிட்ட காரணிகள் தட்டம்மை பரவல் தீவிரமடைவதற்கு முக்கிய காரணிகளாகக் குறிப்பிடப்படுகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற மாணவர் போராட்டங்களைத் தொடர்ந்து ஷேக் ஹசீனா தலைமையிலான அரசாங்கம் பதவி விலகியதையடுத்து, இடைக்கால அரசாங்கம் பொறுப்பேற்றது.
அதன்பின்னர், புதிய தடுப்பூசி விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்ட தாமதமே தடுப்பூசி தட்டுப்பாட்டுக்கு காரணமாக அமைந்ததாக யுனிசெஃப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் , பங்களாதேஷ் சுகாதார அமைச்சகம் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது.