பாலியல் குறியீட்டு கடித விவகாரம்; 10 பில்லியன் டொலர் நட்டஈடு கோரி ட்ரம்ப் வழக்கு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தித் தாள், அதன் உரிமையாளர் ரூபர்ட் மெர்டொக் உள்ளிட்ட பலரை எதிர்த்து 10 பில்லியன் அமெரிக்க டொலருக்கான அவதூறு வழக்கொன்றை மியாமி கூட்டாட்சி நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு, நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான எப்ஸ்டீனின் பிறந்த நாளுக்காக 2003ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட ஒரு வாழ்த்து கடிதத்தில் டொனால்ட் ட்ரம்பின் பெயர் உள்ளது என குறித்த செய்தித் தாள்,செய்தி வெளியிட்டதையடுத்து தாக்கல் செய்யப்பட்டது.
டிரம்ப்' பின் அந்த கடிதத்தில் பாலியல் ரீதியான குறியீடுகளும், இருவரும் பகிர்ந்த இரகசியங்களை குறிப்பிடும் அம்சங்களும் உள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் அந்த செய்தி "பொய்யானது என மறுத்துள்ள டொனால்ட் ட்ரம்ப், இது தமக்கு அவப்பெயரை உண்டாக்கும் முயற்சி எனவும் கண்டித்துள்ளார்.
இந்தநிலையில், ரூபர்ட் மெர்டொக்கையும் மற்றைய செய்தியாளர்களையும் கடுமையாக விமர்சித்த டொனால் ட்ரம்ப், இதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து முன்னதாகவே எச்சரித்திருந்தார்.
எவ்வாறாயினும், வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நிறுவனம், தங்களது செய்தி முழுமையாக உண்மையானதும் நம்பகமானதுமாகும் என வலியுறுத்தி, இந்த வழக்கைத் தைரியமாக எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை, நிதியாளரும் பாலியல் குற்றவாளியுமான எப்ஸ்டீன், 2019 ஆம் ஆண்டு நியூயோர்க் சிறைச்சாலையில் இருந்தபோது, உயிரை மாய்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.