தொடரும் பாலியல் சர்ச்சை ; அரச குடும்பத்தில் புயல் ; இளவரசர் ஆண்ட்ரூ Duke of York பட்டம் பறிக்கப்படுமா?
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் ‘டியூக் ஆஃப் யார்க்’ (Duke of York) பட்டத்தை, பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவிடமிருந்து நிரந்தரமாகப் பறிக்க, தீவிரமாக ஆலோசித்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்புடைய பாலியல் விவகாரங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவின் நிலை படுமோசமாகியுள்ளது.
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய மின்னஞ்சல்
எப்ஸ்டீனுடனான தொடர்பை துண்டித்து விட்டதாக ஆண்ட்ரூ முன்னர் கூறியிருந்த நிலையில், நாம் இதில் ஒன்றாக இருக்கிறோம் என்று எப்ஸ்டீனுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல் இப்போது அம்பலமாகி அரச குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இந்நிலையில் இளவரசர் ஆண்ட்ரூ விவகாரத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர, மன்னர் சார்லஸ் III பரிசீலித்து வருவதாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, இராணுவப் பட்டங்கள், அரசப் பணிகள் ஆகியவற்றிலிருந்து நீக்கப்பட்டு, HRH (His Royal Highness) பட்டத்தைப் பயன்படுத்தவும் ஆண்ட்ரூவுக்குத் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது அவரது இறுதியான ‘டியூக் ஆஃப் யார்க்’ பட்டத்தையும் பறிக்க மன்னர் பரிசீலிப்பதாகக் கூறப்படுகிறது.
அதேவேளை இந்தப் பிரச்சினை மேலும் மோசமாவதற்கு முன், இளவரசர் ஆண்ட்ரூவே தாமாக முன்வந்து தனது பட்டங்களைத் துறக்க வேண்டும் என்று அரண்மனை வட்டாரங்கள் எதிர்பார்ப்பதாகக் கூறப்படுகிறது.