ட்ரம்பின் அதிரடி திட்டம் ; ஹோர்முஸ் நீரிணையை பயன்படுத்தும் கப்பல்களுக்கு சிக்கல்
ஈரானிய துறைமுகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த கடற்படைத் தடைகளை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக ஊடக கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் பதிவில் ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருக்கிறது, ஈரான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது தொடர்ந்து திறந்திருக்கும். நாம் 'ஈரானிய கடற்படைத் தடையை' மீண்டும் அமுல்படுத்துகிறோம்.
ஈரான் கப்பல்கள் அல்லது அவர்களின் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே நுழைவதையும் வெளியேறுவதையும் இது தடுக்கும் என்பதால் இதற்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
மற்ற அனைத்து நாடுகளும் இந்த நீரிணையை நியாயமான முறையிலும் திறந்த நிலையிலும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெறும். இனிமேல் அமெரிக்கா, 'ஹோர்முஸ் நீரிணையின் பாதுகாவலன்' என்று அழைக்கப்படும்.
ஆனால் நியாயத்தின் அடிப்படையில், உலகின் இந்த அதிதீவிர பதற்றமான பிராந்தியத்திற்கு பாதுகாப்பை வழங்குவதற்காக ஏற்படும் அனைத்து செலவுகளுக்கும் ஈடாக, அந்த கடல் வழித்தடத்தின் ஊடாக கொண்டு செல்லப்படும் அனைத்து பொருட்களுக்கும் 20% வீதத்தில் நமக்கு பணம் திருப்பிச் செலுத்தப்பட வேண்டும்.
இதற்கான செயல்முறை மற்றும் கட்டமைப்பை உருவாக்கும் பணிகள் உடனடியாகத் தொடங்கப்படும்." என்றார்.