வொஷிங்டன் டி.சி. நகரில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, நால்வர் காயம்
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி. நகரிலுள்ள உடற்பயிற்சி நிலையம் ஒன்றுக்குள் நேற்று (12) காலை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலின் பின்னர் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் பதுங்கியிருந்த சந்தேகநபரும் தன்னைத்தானே சுட்டு உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை மாளிகைக்கு வடகிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ள லோகன் பகுதியில், அந்நாட்டு நேரப்படி காலை 8.00 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு 30 வினாடிகளுக்குள் விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரைக் கண்டெடுத்தனர்.
காயமடைந்த நால்வரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மெட்ரோபொலிட்டன் பொலிஸ் பதில் பிரதானி ஜே.டபிள்யூ. கரோல் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை நடத்திய நபர் அருகிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் 7 ஆவது மாடியில் தன்னைத் தானே பூட்டிக்கொண்டு பதுங்கியிருந்துள்ளார். பொலிஸ் பேச்சுவார்த்தையாளர்கள் அவருடன் தொடர்பு கொண்டு பேசிய போதிலும், சுமார் ஒரு மணி நேரத்தின் பின்னர் உள்ளிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது.
பொலிஸார் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட நிலையில் காணப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.