அமெரிக்க சுதந்திர தினத்தன்று துப்பாக்கிச் சூடு ; நியூயோர்க்கில் 4 சிறுவர்கள் உட்பட 8 பேருக்கு நேர்ந்த கதி
அமெரிக்க சுதந்திர தினமான 4ஆம் திகதி சனிக்கிழமை இரவு, நியூயோர்க்கின் புரூக்ளின் பகுதியிலுள்ள புகழ்பெற்ற கோனி தீவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு சிறுவர்கள் உட்பட குறைந்தது எட்டுப் பேர் காயமடைந்துள்ளதாக நியூயார்க் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர தின வாணவேடிக்கைக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், அந்நாட்டு நேரப்படி இரவு 10:35 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மீட்பு பணி
துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த எட்டுப் பேரும் அவசர மருத்துவ சேவை மூலம் உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 21 வயதுடைய இளம் பெண் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், ஏனைய 7 பேரும் தற்சமயம் ஆபத்தான கட்டத்தைக் கடந்துள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களுள் 14, 12, 7 மற்றும் 6 வயதுடைய நான்கு சிறுவர்களும், 37 மற்றும் 33 வயதுடைய இரு ஆண்களும், 25 வயதுடைய பெண் ஒருவரும் அடங்குவர். இப்பயங்கரவாதச் செயல் குறித்து நியூயார்க் பொலிஸார் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர்களைக் கண்டறியவும், அதன் பின்னணியை வெளிப்படுத்தவும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் தடயங்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன.