இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு சீக்கியர்கள் கனடிய அரசிடம் கோரிக்கை
கனடாவில் வாழ்ந்து வரும் சில சீக்கியர்கள், இந்தியா மீது கடுமையான நிலைப்பாடு எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இதேவேளை, பிரதமர் மார்க் கார்னி இந்த வாரம் இந்தியாவிற்கு வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் பயணம் மேற்கொள்ளத் தயாராகிறார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த சீக்கிய செயற்பாட்டாளர் மொனிந்தர் சிங் தனது உயிருக்கு நம்பகமான அச்சுறுத்தல் இருப்பதாக வான்கூவார் பொலிஸார் எச்சரித்ததாக தெரிவித்தார்.

இந்த அச்சுறுத்தல் இந்திய அரசுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார்.
2022க்கு பின்னர் தமக்கு வழங்கப்பட்ட முதல் “எச்சரிக்கை கடமை” (duty-to-warn) அறிக்கை இதுவாகும் என்றும், இம்முறை தமது மனைவி மற்றும் குழந்தைகளுக்கும் எச்சரிக்கை வழங்கப்பட்டிருப்பது கவலைக்கிடமான முன்னேற்றம் என்றும் அவர் கூறினார்.
கனடாவின் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கு தொடர்பாக எந்த நாட்டுடனும் நெகிழ்வுப் போக்கு பின்பற்றப்படாது என வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்தார்.
மேலும், இந்தியா மற்றும் கனடாவுக்கிடையில் சட்ட அமலாக்க உரையாடல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் கூறினார்.
மோனிந்தர் சிங், இந்தியாவின் பகுதியிலிருந்து தனி சீக்கிய நாடான ‘காலிஸ்தான்’ உருவாக்கம் குறித்து தனது செயல்பாடுகள் காரணமாக தாம் குறிவைக்கப்பட்டிருக்கலாம் என நம்புகிறார்.
இதேபோன்று, 2023ஆம் ஆண்டு ஹார்தீப் சிங் நிஜார் கொலை செய்யப்பட்ட சம்பவமும் கனடா-இந்தியா உறவுகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.