போதைப்பொருள் கடத்தல்; தமிழரை தூக்கிலிட்ட சிங்கப்பூர்
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுக்காக, மலேசிய நபரொருவர் துக்கிலிடப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மரண தண்டனையை ஒழிக்க வேண்டும் என சிங்கப்பூரில் கோரிக்கைகள் இருந்தபோதிலும், இந்த வருடத்தின் 11வது மரணதண்டனையாக இது பதிவாகியுள்ளது.
39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா
39 வயதான தட்சிணாமூர்த்தி கட்டையா என்பவருக்கே இவ்வாறு மரணதண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சந்தேக நபர் 2011ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் சிங்கப்பூருக்கு சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெரோயின் கடத்தியதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டது.
2022ஆம் ஆண்டு அவர் தூக்கிலிடப்படவிருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டமையால் தடை ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலேசிய சட்டத்தரணி நிறைவேற்றப்பட வேண்டிய மரணதண்டனை நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார்;.
இருப்பினும், சிங்கப்பூர் சிறை அதிகாரிகள் மரணதண்டனை தொடரும் என்றும், இரண்டு மணி நேரத்திற்குள் அவரது உடலை சேகரிக்குமாறும் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஒரு அறிக்கையில் அவரது மரணதண்டனையை தொடர்பான அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டிருந்தது. அவருக்கு முழு சட்ட நடைமுறையும் வழங்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் கருணை மனுக்கள் தோல்வியடைந்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர்
அவர் எடுத்துச் சென்ற போதைப்பொருட்களின் அளவு சுமார் 540 பேரை ஒரு வாரத்திற்கு அடிமையாக்கக்கூடும் என்றும் அறிக்கை கூறியது.
அதில் , “தனிப்பட்ட போதைப்பொருள் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் குடும்பங்களுக்கும் பரந்த சமூகத்திற்கும் மிகவும் கடுமையான தீங்கு விளைவிக்கும் கணிசமான அளவு போதைப்பொருட்களைக் கடத்துவது போன்ற மிகக் கடுமையான குற்றங்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தியின் மரணதண்டனையை எதிர்த்து இந்த வார தொடக்கத்தில் கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் மரண தண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டு இதுவரை தூக்கிலிடப்பட்ட மூன்றாவது மலேசியர் மற்றும் 11வது நபர் இவர் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வாரம் 30க்கும் மேற்பட்ட மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் சிங்கப்பூர் மரணதண்டனைகளை நிறுத்த வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளன. எவ்வாறாயினும், சிங்கப்பூர் அரசாங்கம் அதன் குடிமக்களைப் பாதுகாக்க இவ்வாறான தண்டணைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளது.