இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை வாகனத்தில் சிக்கி குடும்பஸ்தர் படுகாயம்!
இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் (Sivanesathurai Chandrakanthan) வாகனத் தொடரணியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து சம்பவம் நேற்று (15-04-2023) சனிக்கிழமை மாலை அம்பாறை - கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உள்ளக வீதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
இரு உள்ளக வீதிகளை இணைக்கின்ற நாற்சந்தியில் எதிரும் புதிருமாக வந்த பிள்ளையானின் வாகனத் தொடரணியில் பங்கேற்ற கெப் ரக வாகனமும் மறுமுனையில் வந்த மோட்டார் சைக்கிளும் மோதி இவ்விபத்து இடம்பெற்றது.
இதன்போது குறித்த விபத்து சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு விபத்திற்குள்ளான கெப் ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.