பிரதமர் ட்ரூடோவிடம் உதவி கோரிய Six Nations சமூகம்
கனடாவின் மிகப்பெரிய பூர்வக்குடி சமூகமான Six Nations பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் அடையாளப்படுத்தப்படாத கல்லறை தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளில் உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.
பிரதமர் ட்ரூடோவுக்கான ஒரு திறந்த மடலில் Six Nations சமூகம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த தேடுதல் நடவடிக்கைகளில் எங்களுக்கான உதவியை பெடரல் அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அந்த கோரிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தெற்கு ஒன்ராறியோ பிரதேசத்தில் உள்ள மொஹாக் கல்வி நிறுவனம் கனடாவின் முதல் உண்டுறை பள்ளிகளில் ஒன்று எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த பகுதியையும் ரேடார் தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என Six Nations சமூகம் கோரியுள்ளது.
இறந்தவர்களுக்கு கண்டிப்பாக மரியாதை செய்யப்பட வேண்டும் எனவும், உயிர் தப்பியவர்களின் அனுபவங்கள் கேட்கப்பட வேண்டும் எனவும் பெடரல் அரசாங்கத்தை Six Nations சமூகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதனிடையே, Six Nations சமூகம் முன்வைத்துள்ள கோரிக்கை பரிசீலனையில் உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Six Nations சமூகம் தற்போது 13,000 குடியிருப்பாளர்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.