கனடாவில் வயல்வெளியில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்து விபத்து
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள ஃபெர்கஸ் நகருக்கு அருகே சிறிய ரக விமானம் ஒன்று வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது குறித்து ஒன்ராறியோ மாகாணக் காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமை காலையில் ஃபெர்கஸ் மற்றும் ஆர்தர் நகரங்களுக்கு இடையே உள்ள பீட்டி லைன் மற்றும் வெலிங்டன் ரோடு 17 சந்திப்புக்கு அருகே இந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.
தரைதட்டிய சில நொடிகளிலேயே அந்த விமானம் தீப்பற்றி எரியத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

"இந்த விபத்தில் விமானத்தில் இருந்தவர்களுக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மை அல்லது உயிரிழப்புகள் குறித்து தற்போது வரை துல்லியமான விவரங்கள் தெரியவரவில்லை" என்று காவல்துறை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக கனடா போக்குவரத்துத் துறைக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்துக் காவல்துறையினர் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.