சுவிஸ் மாணவரிடையே ஸ்மாட்போன் பாவனைக்குத் தடை
சுவிற்சர்லாந்தில் பாடசாலைகளில் கல்விகற்கும் 16 வயதுக்குட்பட்ட மாணவர்கள் கையடக்க தொலைபேசியை பாடசாலை நேரங்களில் உபயோகிப்பதை தடைசெய்வது பற்றி சுவிஸ் பெடரல் அமைப்பு ஆலோசித்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கையடக்க தொலைபேசி பாவனையால் மாணவர்களுக்கு மன ஆரோக்கியம் குறைவதாகவும், பாடசாலை நேரங்களில் வகுப்பில் ஆசிரியர்கள் கற்பிற்பதை அவதானிப்பதை விடுத்து சமூக ஊடகங்களில் மாணவர்கள் மூழ்கியுள்ளதாகவும் அண்மையில் நாடாளுமன்றத்தில் இதுபற்றி விவாதிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இந்தச்சட்டம் அமுலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உளவியல் பாதிப்பு
இன்றைய இளைஞர் யுவதிகள் ஸ்மாட் போன்களை அதிகம் பயன்படுத்துவதால் சமூக ஊடகங்கள் மாணவர்களின் சுய சிந்தனைகளை சிதைக்கின்றன, பாடங்களில் கவனக்குறைவு, அத்துடன் கற்றலில் எதிர்மறையான தாக்கம் , மனச்சோர்வு, கவலைக்கோளாறு மற்றும் தற்கொலை எண்ணங்களும் அவர்களுக்கு அதிகரிப்பதாக ஆய்வுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய காரணங்களால் பாடசாலைகளில் முற்றுமுழுதாக கையடக்க தொலைபேசி பாவனை தடை செய்யப்படுமா ? அல்லது வகுப்பு நேரங்களில் பாவனைத் தடையாக மாற்றம் பெறுமா ? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது .
சிலநாடுகளில் ஏற்கனவே இப்படியான சட்டங்கள் நிறைவேற்றியுள்ளதால் கணிசமான நன்மைகளை மாணவர்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன. பிரான்ஸ் நாட்டில் வகுப்பு நேரங்களில் கையடக்க தொலைபேசி பாவனைக்கு தடைவிதித்து சட்டமுலாக்கம் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகத்திலேயே மக்கள் நுண்ணறிவு உள்ள நாடுகளின் தர வரிசையில் முதலிடத்தை தக்கவைத்துள்ள நாடாகவும் சுவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்படியான இறுக்கமான சட்டங்களை பெற்றோர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர்.