ஷாம்பு போத்தல்கள் , காலுறைகளுக்குள் பாம்பு கடத்தல்; ஜேர்மன் விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி
ஜேர்மனியின் கோலோன் பான் வானூர்தி நிலையத்தில், ஷாம்பு போத்தல்கள் மற்றும் காலுறைகளுக்குள் மறைத்து 37 நச்சுப் பாம்புகள் மற்றும் 55 பல்லிகளைக் கடத்த முயன்ற மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிகப்படியான பதற்றத்துடன் காணப்பட்ட அவரை சோதனையிட்ட போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டதுடன், அவரது பையிலிருந்து இத்தகைய ஆபத்தான ஊர்வன விலங்குகள் மீட்கப்பட்டன.

நீண்ட பயணத்தின் காரணமாக சில விலங்குகள் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மீதமுள்ள உயிரோடு மீட்கப்பட்ட விலங்குகள் பாம்புப் பண்ணை ஒன்றில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து, அந்த நபருக்கு ஜெர்மனிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.