ஸ்புட்னிக்-வி பயன்படுத்தும் 2-ஆவது ஐரோப்பிய யூனியன் நாடு ஸ்லோவாகியா
ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசியை பயன்படுத்தும் ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த 2-ஆவது நாடாக ஸ்லோவாகியா உள்ளது. முன்னதாக, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை ஐரோப்பிய யூனியனின் மற்றொரு நாடான ஹங்கேரி முதல்முறையாக பயன்படுத்தியது. ஐரோப்பிய யூனியனின் மருத்துவக் குழு ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு இதுவரை முறைப்படி அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஸ்லோவாகியா ரகசிய ஒப்பந்தம் செய்தது. இதனால் கடந்த மாா்ச் மாதம் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டு, பிரதமா் இகோா் மாடோவிக் அரசு கவிழந்தது. ஏனெனில், அவா்தான் ரஷ்யா தடுப்பூசியை வாங்க ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டாா்.
எனினும், ஒப்பந்தப்படி ரஷ்யாவிடம் இருந்து 20 லட்சம் தடுப்பூசிகள் வாங்கப்பட்டன. ஆனால், இதுவரை 5,000 போ் மட்டுமே இருமுறை ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை செலுத்துக் கொண்டுள்ளனா். ஸ்லோவாகியாவில் மக்கள்தொகை சுமாா் 54 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டில் ஏற்கெனவே ஃபைசா், மாடா்னா, அஸ்ட்ராஸெனகா ஆகிய தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இவை ஐரோப்பிய யூனியன் மருத்துவக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாகும்.