கனடாவின் இந்தப் பகுதியில் குடும்ப வன்முறைகள் அதிகரிப்பு
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் குடும்ப வன்முறைச் சம்பவங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துள்ளன.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து குடும்ப வன்முறைச் சம்பவங்களில் வாரத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உயிரிழந்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமை குறித்து பெண்கள் உரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளன.
துணைவர் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளின் பாதுகாப்புக்காக செயல்படும் இலாப நோக்கற்ற அமைப்பு ஒன்று இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஒவ்வொரு பெண்கொலையும் தனிப்பட்ட சோகம் அல்ல. இது பெண்களை பாதுகாக்கத் தவறிய சமூகத்தின் கூட்டுத் தோல்வி என அந்த அமைப்பின் மருத்துவ ஒருங்கிணைப்பாளர் கிளாடின் திபோடோ தெரிவித்தார்.
நமது சமூகத்தில் ஏதோ ஒன்று தவறாக உள்ளது; தேவையான பாதுகாப்பு குறைவாக உள்ளது. அதன் விளைவாகவே பெண்கொலைகள் நடைபெறுகின்றன என அவர் கூறினார்.
அமைப்பின் தகவலின்படி, முதல் சந்தேகத்திற்குரிய பெண்கொலை புத்தாண்டு தினத்தன்று நிகழ்ந்தது.
31 வயதான தட்ஜானா டெசீர், மூன்றாவது மாடி பால்கனியிலிருந்து தள்ளப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் கடுமையாக காயமடைந்து, பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் ஜேம்ஸ் தெரமேனுக்கு மனிதக்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 7 அன்று காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 44 வயதான சுசானா ரோச்சா குரூஸ், ஜனவரி 13 அன்று கியூபெக் நகர துறைமுகத்தில் உள்ள செயின்ட் லாரன்ஸ் நதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக 43 வயதான அபிரகாம் போன்சலெஸ் லியோன் மீது இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனவரி 18 அன்று கடுமையான காயங்களுடன் உயிரிழந்த 40 வயதான வெரோனிக் ஷாம்பேன் மரணம் தொடர்பாக, தற்போது வரை எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என கியூபெக் அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அவரது வீடும் தீ வைத்து எரிக்கப்பட்டிருந்தது.
ஜனவரி 5 அன்று, நுனாவிக்கில் 54 வயதான மேரி இகிகுக் டுகலக் கொலை அல்லது தற்கொலை சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல பெண்கள் துணையின் வன்முறைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.