வேகமெடுக்கும் ஓமிக்ரான் அலை... ஜனாதிபதி சிரில் கொரோனாவால் பாதிப்பு
தென்னாபிரிக்காவில் கொரோனா பாதிப்பு ஒரேநாளில் 37,875 என அதிகரித்துள்ள நிலையில், ஜனாதிபதி சிரில் ரம்போசா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென் ஆபிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால்,லேசான அறிகுறிகள் மட்டுமே அவருக்கு இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவில் நேற்று முன்தினம் 17,154 பேர் பாதிக்கப்பட்டதாக தெரியவந்த நிலையில் ஒரேநாளில் 37,875 என தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அரசு தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்புக்குள்ளான ஜனாதிபதி சிரில் தற்போது தென்னாபிரிக்க ராணுவ சுகாதார மைய மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கேப்டவுன் நகரில் உள்ள இல்லத்தில் ஜனாதிபதி சிரில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி சிரில் ரம்போசா உள்ளிட்ட தென் ஆபிரிக்க பிரதிநிதிகள் மேற்கு ஆபிரிக்காவில் உள்ள 4 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
அங்கிருந்து திரும்பிய நிலையிலேயே ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால், ஜனாதிபதியுடன் சென்ற எஞ்சிய பிரதிநிதிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.