கனடாவில் குடியேறும் இந்த இரு நாட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு
கனடாவில் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழி பேசுவோர் அல்லாதவர்கள் குடியேறும் எண்ணிகை அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
2021ல் வெளியான தரவுகளின் அடிப்படையில், நான்கில் ஒருவர் கனடாவின் இரண்டு உத்தியோகப்பூர்வ மொழி பேசாதவர்கள் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், மாண்டரின் மற்றும் பஞ்சாபி ஆகிய இரு மொழிகள் கனடாவில் மிகவும் பொதுவான அதிகாரப்பூர்வமற்ற மொழிகளாக தற்போது மாறியுள்ளதுடன், ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அவற்றில் ஒன்றைப் பேசுகிறார்கள் எனவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கடந்த 2016 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் குஜராத்தி, இந்தி அல்லது மலையாளம் போன்ற தெற்காசிய மொழிகளைப் பேசும் கனடியர்களின் எண்ணிக்கையானது பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதே நிலை தொடர்ந்து அதிகரிப்பதாகவும் தெற்காசிய மக்கள் அதிக எண்ணிக்கையில் கனடாவில் குடியேறுவதும் முதன்மை காரணமாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடா குடிமக்களில் தற்போது நான்கில் ஒருவர் ஆங்கிலம் அல்லது பிரஞ்சை தாய்மொழியாக கொள்ளாதவர் என்றே தெரிய வந்துள்ளது.
மேலும், 2016 மற்றும் 2021 க்கு இடையில், கனேடிய குடியிருப்புகளில் ஆங்கிலம் அல்லது பிரஞ்சு மொழியைப் பேசாத கனடியர்களின் எண்ணிக்கை 15 சதவீதம் உயர்ந்து நான்கு மில்லியனிலிருந்து சுமார் 4.6 மில்லியனாக அதிகரித்துள்ளது.
மட்டுமின்றி, மே 2016 முதல் டிசம்பர் 2020 வரை கனடாவுக்கு குடியேறிய நிரந்தர குடியிருப்பாளர்களில் கால் பகுதியினர் தெற்காசிய நாட்டில் பிறந்தவர்கள் எனவும் இதில் ஐந்தில் ஒருவர் இந்தியாவில் பிறந்தவர்கள் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதே காலகட்டத்தில், கனடாவிற்கு வந்த நிரந்தர குடியிருப்பாளர்களில் 10 பேரில் ஒருவர் முறையே மாண்டரின் மற்றும் தாகலாக் மொழி பேசப்படும் சீனா அல்லது பிலிப்பைன்ஸில் பிறந்தவர்கள் எனவும் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.