அமெரிக்காவின் எலும்புக்காக வாயைப்பிளக்கும் முட்டாள்கள்: கிம் ஜோங் உன் சகோதரி காட்டம்
தென் கொரிய அரசாங்கத்தை கடுமையாக சாடியுள்ள கிம் ஜோங் உன் சகோதரி, எலும்புத்துண்டுக்காக காத்திருக்கும் தெரு நாய் என குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிம் யோ ஜோங், அவமானங்களை துடைத்தெறியும் தருணம் இதுவெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வட கொரியாவிற்கு எதிராக அமெரிக்கா மற்றும் அதன் தென் கொரிய கைக்கூலிகளின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அழுத்தம் குறித்து நாங்கள் மீண்டும் ஒரு முறை அந்த முட்டாள்களை எச்சரிக்கிறோம் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, பொருளாதாரத் தடைகள் மூலம் தற்போதைய ஆபத்தான சூழ்நிலையிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தால், அவர்கள் நிம்மதியாகவும் வசதியாகவும் வாழத் தெரியாத முட்டாள்களாகத்தான் இருக்க வேண்டும் என கிம் யோ கொந்தளித்துள்ளார்.
வடகொரியா தனது முந்தைய அணுசக்தி மற்றும் ஏவுகணை சோதனைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பல சுற்று தடைகளுக்கு உட்பட்டுள்ளது.
ஆனால், இந்த ஆண்டில் இதுவரை வடகொரியா மீது எந்த புதிய தடைகளும் விதிக்கப்படவில்லை, இருப்பினும் வடகொரியா சமீப மாதங்களில் டசின் கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை முன்னெடுத்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களால் தடை செய்யப்பட்டுள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.