வீடுகள் மீது தவறுதலாக குண்டு வீசிய தென்கொரிய போர்விமானங்கள்
தென்கொரிய போர்விமானங்கள் தவறுதலாக வீடுகள் மீது வீசிய குண்டுகள் காரணமாக 7 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர்விமான ஒத்திகையின் போது பொதுமக்கள் வாழும் பகுதிகள் மீது விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியதில் 7 பேர் காயமடைந்துள்ளனர் நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தேவாலயமும் சில வீடுகளும் சேதம்
இந்த சம்பவத்தினால் ஒரு தேவாலயமும் சில வீடுகளும் சேதமடைந்துள்ளன. வடகொரியா எல்லைக்கு அருகில் உள்ள பொச்சியோன் என்ற நகரத்தின் குடியிருப்புகள் மீது விமானப்படையின் கேஎவ் 16 விமானங்கள் தவறுதலாக குண்டுகளை வீசியுள்ளன.
இதில் ஒரு குண்டு வெடித்துள்ளது, ஏனைய குண்டுகளை பாதுகாப்பாக அகற்றும் நடவடிக்கைகளில் குண்டு செயல்இழக்கவைக்கும் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இருவருக்கு கழுத்திலும் தோளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக உள்ளுர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குண்டுகள் விழுந்து வெடித்தபோது வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த 60 வயது பெண்ணொருவரின் கழுத்தை குண்டு சிதறல்கள் தாக்கியுள்ளன. வாகனத்தை செலுத்திக்கொண்டிருந்த வேளை பாரிய சத்தம் கேட்டது,நான் கண்விழித்தவேளை அம்புலன்சில்இருந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்கள் விமானங்கள் தவறுதலாக எம்கே 82 குண்டுகளின் 8 எறிகணைகளை வீசியுள்ளன. அவை சூட்டு எல்லைக்கு வெளியே விழுந்துள்ளன என தென்கொரிய விமானப்படை தெரிவித்துள்ளது.
இதற்காக மன்னிப்பு கோரியுள்ள விமானப்படை, விசாரணைகள் இடம்பெறுவதாகவும் இழப்பீடுகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.