50 ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட சோவியத் விண்கலம் இந்திய பெருங்கடலில் விழுந்தது
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் ஏவப்பட்ட சோவியத் விண்கலமான 'காஸ்மோஸ் 482' இன்று மதியம் வாக்கில் இந்திய பெருங்கடலில் விழுந்திருப்பதாக சீன செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது.
இந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், எங்கு விழும் என்பதை முன்கூட்டியே கணிக்க முடியாமல் போனது. இந்நிலையில் தற்போது இந்திய பெருங்கடலில் விழுந்ததாக சொல்லப்படுகிறது.
காஸ்மோஸ் 482
வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய 1972ம் ஆண்டு சோவியத் ரஷ்யா இந்த விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. ஆனால் பூமியை விட்டு போன கொஞ்ச நேரத்திலேயே இந்த விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
எவ்வளவோ முயன்று பார்த்தும் விண்கலத்தை மீண்டும் பூமிக்கு கொண்டுவர முடியவில்லை. அதை திசை திருப்பி வெள்ளி கிரகத்திற்கும் அனுப்பி வைக்க முடியவில்லை.
ஏறத்தாழ 50 ஆண்டுகளாக பூமியை சுற்றி வந்த இது, இன்று பூமியில் விழும் என கணிக்கப்பட்டிருந்தது. 'காஸ்மோஸ் 482' விண்கலத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால், அது எங்கு விழும் என்பதை சரியாக கணிக்க முடியாமல் போனது. இந்நிலையில் இந்த விண்கலம் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.