இஸ்ரேலுடனான உறவை துண்டிக்குமாறு: ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை!
சர்வதேச சட்டங்களை மீறிச் செயல்படும் இஸ்ரேலுடன் கொண்டுள்ள அனைத்து உறவுகளையும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) துண்டிக்க வேண்டும் என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, இஸ்ரேலுடனான 'கூட்டு ஒப்பந்தத்தை' (Association Agreement) ரத்து செய்யக் கோரி ஐரோப்பிய ஒன்றியத்திடம் ஸ்பெயின் அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு முன்மொழிவைச் சமர்ப்பிக்கும் எனசான்செஸ் அறிவித்தார்.
இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுகிறது. எனவே, அந்த நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்காளியாக இருக்க முடியாது. இது மிகவும் எளிமையான விஷயம்" என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

ஸ்பெயினுடன் இணைந்து அயர்லாந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளும் ஐரோப்பிய ஆணையத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளன.
அடுத்த ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று அவை வலியுறுத்தியுள்ளன.
இஸ்ரேலுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஜூன் 2000-ல் கையெழுத்தான இந்த ஒப்பந்தத்தில், "மனித உரிமைகளை மதிக்க வேண்டும்" என்ற மிக முக்கியமான நிபந்தனை உள்ளது.
காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இந்த நிபந்தனையை மீறுவதாக ஸ்பெயின் குற்றம் சாட்டுகிறது.
2024-ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக ஸ்பெயின் அங்கீகரித்தது முதலே இஸ்ரேலுக்கும் ஸ்பெயினுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்தது.
தற்போது நெதன்யாகு அரசாங்கத்தின் மீதான தனது விமர்சனங்களை பிரதமர் சான்செஸ் தீவிரப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.