பிரான்ஸில் இடிந்து விழுந்த புகையிரத பாலம் ; உயிரிழந்த இலங்கை தமிழர்
பிரான்ஸின், துளூஸ் நகரின் புறநகரான லபேஜ் அருகே கட்டுமானப் பணி நடைபெற்று வந்த புகையிரத பாலம் இடிந்து விழுந்ததில், இலங்கைத் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் விபத்து நிகழ்ந்தது.
பாலம் இடிந்து விழுந்த போது, கொங்கிறீட் பாலத்தின் தளப் பகுதியில் 4 பேர் சிக்கிக் கொண்டனர்.
ஆரம்ப கட்ட விசாரணை
அனர்த்தத்தில் சிக்குண்டவர்கள் நால்வரும் தங்களது நிறுவனத்தின் பணியாளர்களே என்று, பால கட்டுமானத்தில் ஈடுபட்ட Bouygues Travaux publics கட்டட நிர்மான நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். நான்காவது நபருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டன. உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினருக்கு நிறுவனம் தனது இரங்கலை வெளியிட்டிருக்கிறது.
Bouygues Travaux publics கட்டுமான நிறுவனத்தில் நீண்ட காலம் பணியாற்றி வந்தவரான 55 வயதுடைய மூன்று பிள்ளைகளது தந்தையே உயிரிழந்துள்ளார்.
அவர் பாரிஸின் புற நகராகிய பொண்டியில் வசித்து வந்தவர். விபத்து எவ்வாறு நேர்ந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
விபத்து நேர்ந்த சமயம் பணியாளர்கள் நால்வரும் பாலத்தின் தளப் பகுதி மீது நின்றிருந்தனர் என்று கூறப்படுகிறது.
பாலம் தகர்ந்த சமயத்தில் அவர்கள் பத்து மீற்றர்கள் உயரத்தில் இருந்து கீழே குதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. ஆரம்ப கட்ட விசாரணைகள் பாரம் தூக்கி ஒன்றின் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பே இந்த அனர்த்தத்துக்குக் காரணம் என்று கண்டறிந்துள்ளன.