மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல்; 16 குழந்தைகளுக்கு நேர்ந்த கதி!
சீனாவில் மழலையர் பள்ளிக்கூடம் மர்மநபர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் 16 குழந்தைகளும் 2 ஆசிரியர்களும் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் குவாங்சி ஜுவாங் பிராந்தியத்தில் உள்ள மழலையர் பள்ளிக்கூடம் ஒன்றில் நேற்று காலை வழக்கம்போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது கையில் கத்தியுடன் நுழைந்த மர்ம நபர் வகுப்பறைகளுக்குள் புகுந்து அங்கிருந்த குழந்தைகளை சரமாரியாக குத்தினார். இதனால் அங்கு பெரும் பதற்றமும் பீதியும் உருவானது.
குழந்தைகளை காப்பாற்ற பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் ஓடிச் சென்றபோது மர்ம நபர் அவர்களையும் கண்மூடித்தனமாக கத்தியால் குத்தினார். இந்த சம்பவத்தில் 16 குழந்தைகளும் 2 ஆசிரியர்களும் பலத்த காயமடைந்தனர்.
தாக்குதல் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பள்ளிக்கூடத்தை சுற்றி வளைத்து மர்ம நபரை துப்பாக்கி முனையில் மடக்கி பிடித்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
எனினும் இந்த தாக்குதல் நடத்திய நபர் யார்? தாக்குதலின் பின்னணி என்ன? என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
இதேவேளை கடந்த ஜனவரி மாதம் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் ஒருவர் உயிரிழந்ததும் கொலையாளியை போலீசார் சுட்டுக்கொன்றதும் நினைவுகூரத்தக்கது.