ஸ்டேபிள்ஸ் கனடா இணையதளத்தில் சைபர் தாக்குதல்: வாடிக்கையாளர் தகவல் கசிவு
கனடாவின் பிரபல எழுதுபொருள் மற்றும் அலுவலகப் பொருட்கள் விற்பனை நிறுவனமான ஸ்டேபிள்ஸ் கனடா, இம்மாதம் இடம்பெற்ற சைபர் தாக்குதல் ஒன்றில் தமது வாடிக்கையாளர்களின் தகவல்களை ஹேக்கர்கள் ஊடறுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
நவம்பர் மாத ஆரம்பத்தில் தமது 'ஸ்டேபிள்ஸ் பிரிண்ட்' இணையதளம் ஊடுருவலுக்கு உள்ளானதாகவும், நிறுவனத்தின் ஏனைய இணையதளங்கள் எவையும் இதனால் பாதிக்கப்படவில்லை என்றும் அந்நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சைபர் தாக்குதலின் போது, வாடிக்கையாளர்களின் தொடர்பு விபரங்கள், கொள்வனவு ஆர்டர் சுருக்கங்கள் மற்றும் குறியாக்கம் செய்யப்பட்ட கடவுச்சொற்கள் ஆகிய தரவுகள் அணுகப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் நிதி தொடர்பான எந்தவொரு தரவும் கசியவில்லை என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது அனைத்துக் கணக்குகளும் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதலின் வீரியத்தை மதிப்பிடுவதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டேபிள்ஸ் கனடா குறிப்பிட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதும் அவர்களின் தகவல்களைப் பேணுவதும் தமது முதன்மையான முன்னுரிமை என்றும், இவ்விடயத்தைத் தாம் மிகவும் தீவிரமாகக் கையாண்டு வருவதாகவும் அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.