சகோதரரின் கைது குறித்து பிரித்தானிய மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
தனது சகோதரரும் முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரின் கைது தொடர்பில் பிரித்தானிய மன்னர் சார்லஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில், இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் ஆண்ட்ரு மவுண்ட் பேட்டன் பெயர் அடிபட்டது.

சட்டம் தன் கடமையை செய்யும்
எப்ஸ்டீன் விவகாரத்தில் அவரது பெயர் அடிபட்டதும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டனை அரச குடும்பத்தின் பதவிகளில் இருந்து நீக்கம் செய்து இங்கிலாந்து அரசர் சார்லஸ் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் விண்ட்சர் அரண்மனையை விட்டு ஆண்ட்ரூ வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில், பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இளவரசர் பட்டத்தை அவர் துறந்துள்ளார். முன்னாள் இளவரசர் ஒருவர் கைது செய்யப்படுவது இங்கிலாந்து வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
சகோதரர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இங்கிலாந்து அரசர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் பற்றிய செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது. இந்த விவகாரம் முறைப்படி அதிகாரிகளால் நியாயமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த விசாரணையில் அதிகாரிகளுக்கு எங்கள் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்கப்படும். நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன், சட்டம் தன் கடமையை செய்யும். விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது இந்த விஷயத்தில் நான் மேலும் கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
நானும் எனது குடும்பத்தினரும் மக்களுக்கு எங்கள் கடமையையும், சேவையையும் தொடர்ந்து செய்து வருவோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.