டெனால்ட் டிரம்ப் வரம்பு மீறிச் செயற்படுகின்றார் ; கனடிய முன்னாள் ராஜதந்திரி
வெனிசுவேலாவில் அமெரிக்கா மேற்கொண்ட சமீபத்திய இராணுவ நடவடிக்கை, கனடாவும் கிரீன்லாந்தும் தங்களின் இணதொடர்பான அச்சுறுத்தல்களை இனி அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது என்பதை தெளிவாக காட்டுகிறது என கனடாவின் முன்னாள் ஐக்கிய நாடுகள் சபை தூதர் பாப் ரே எச்சரித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் இப்போது ‘அடுத்த இலக்கு யார்?’ என்ற புதிய சந்தேக விளையாட்டையே தொடங்கியுள்ளார், எனக் கூறியுள்ளார்.
கிரீன்லாந்து மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது நேட்டோ மீது நடத்தப்படும் தாக்குதலாகவும், டென்மார்க் என்ற நட்பு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் கருதப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

“இது வெறும் ஊகமல்ல. ஒரு அதிபர் இப்படிப்பட்ட திட்டங்களை பகிரங்கமாக பேசுவதும், அதை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதும் உண்மையிலேயே அதிர்ச்சியளிக்கிறது,” என பாப் ரே தெரிவித்தார்.
ஜனவரி 3-ஆம் திகதி, அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும், அவரது மனைவியும் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் “தேசிய பாதுகாப்பு” என்ற பெயரில், டென்மார்க் நாட்டுக்குச் சொந்தமான தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டும் என்ற கருத்தை டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற அவரது கருத்தும் சர்வதேச அளவில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. “இவை வெறும் பேச்சுக்கள் அல்ல,” என பாப் ரே கூறியுள்ளார்.
அவர் நம்மை யார் என்று, நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார் என்பதையே இது வெளிப்படுத்துகிறது.
நம்மைவிட அவர் நம் நாட்டைச் சிறப்பாக நடத்த முடியும் என்ற மனநிலை அவரிடம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெனிசுவேலா, கிரீன்லாந்து மற்றும் கனடா குறித்த டிரம்பின் நிலைப்பாடுகள், அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கையுடன் நேரடியாக ஒத்துப்போகின்றன என பாப் ரே கூறியுள்ளார்.