பரிஸில் பாடசாலையில் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த மாணவன்
பிரான்ஸ் பரிஸில் உள்ள Pierre Alviset நடுநிலைப் பாடசாலையில் கல்வி பயிலும் ஒரு மாணவன், பாடசாலையின் இரண்டாம் மாடி ஜன்னலில் இருந்து குதித்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 1ம் திகதி புதன்கிழமை காலை, முதல் பாடம் முடிந்ததும் நிகழ்ந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் கூறுகின்றன. பாடசாலை நுழைவாயிலில் பணியாற்றிய கண்காணிப்பாளர் உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் அளித்தார்.

தொடர்ந்து, தீயணைப்பு படையினரும் மாணவரின் குடும்பத்தினரும் உடனடியாக தொடர்புகொள்ளப்பட்டனர். இதுவரை மாணவர் மீது பாடசாலை துன்புறுத்தல் (harcèlement scolaire) சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என கல்வி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்குப் பின்னர் அவசரநிலை மேலாண்மை மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கான ஆதரவு நடவடிக்கைகள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டன.
மேலும், சம்பவத்தை கண்ட சாட்சிகள் மற்றும் மாணவர்களுக்கு மருத்துவ-மனநல உதவி வழங்கப்பட்டதுடன், ஆலோசனை சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் ஆதரவு குழுக்கள் இன்று 2ம் திகதி வியாழக்கிழமை பாடசாலையில் நேரில் பங்கேற்று நிலைமையை கண்காணிக்க உள்ளனர்.