பிரான்சில் வன்முறையாக மாறிய மாணவர் போராட்டம்;2,000 பேர் கைது
பிரான்சில் பாடசாலைகளின் நிலைமையை மேம்படுத்தக் கோரி மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ள நிலையில், போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிஸ் பிராந்தியத்தில் கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டங்கள் தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவியுள்ளன.
ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறைகளில் அதிகளவான மாணவர்கள், பழுதடைந்த பாடசாலைக் கட்டிடங்கள், போதிய கற்றல் உபகரணங்கள் இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டங்கள் காரணமாக வெள்ளிக்கிழமை (2) பிரான்ஸ் முழுவதும் 400க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. சில பகுதிகளில் போராட்டங்கள் தீவைப்பு, சொத்துச் சேதம் மற்றும் பொலிஸாருடனான மோதல்களாக மாறியுள்ளன.
போராட்டங்கள் ஆரம்பித்ததிலிருந்து சுமார் 2,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், தீவிர இடதுசாரி அரசியல் குழுக்கள் போராட்டங்களை ஊக்குவிப்பதாக அல்லது பயன்படுத்திக் கொள்வதாக பிரான்ஸ் அரசாங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. எனினும், மாணவர் தலைவர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்து, கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளே போராட்டங்களுக்கான காரணம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், அதிகமான ஆசிரியர்களை நியமித்தல், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல், பழுதடைந்த பாடசாலைக் கட்டிடங்களை புனரமைத்தல், வகுப்பறை நெரிசலைக் குறைத்தல் மற்றும் கற்றல் சூழலை மேம்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர் அமைப்புகள் முன்வைத்துள்ளன.