கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க வேண்டுமா!
வீட்டில் சமையல் செய்வோர் அனைவருக்கும் தெரியும் — வெங்காயம் நறுக்குவது என்றால் கண்ணீர் ததும்பும் ஒரு வேலையே! ஆனால் சமையலறையில் பலர் பல்வேறு வழிகளை பயன்படுத்தி கண்ணீரை தவிர்க்க முயற்சிக்கின்றனர்.
சுயிங்கம் மென்று கொண்டே வெங்காயம் நறுக்குதல், வெங்காயத்தை முன்கூட்டியே குளிரவைத்தல், அல்லது கத்தியை எலுமிச்சை சாற்றால் துடைத்தல் என பல வழிகள் பின்பற்றப்படுகின்றன.
எனினும் இந்த முறைகள் எவ்வளவு தூரம் வினைத்திறனாது? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இதற்கு உறுதியான பதிலை வழங்கும் புதிய ஆராய்ச்சி ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி
கண்ணீர் வராமல் வெங்காயம் நறுக்க ஒரு எளிய வழி மட்டுமே உள்ளதாக அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் காலத்தில் நாங்கள் துளிகள் எவ்வாறு பரவுகின்றன என்பதை ஆய்வு செய்து கொண்டிருந்தோம். அதேபோல் வெங்காயத்தை நறுக்கும் போது ஏற்படும் வாசனை வாயுக்கள், துளிகள் போலவே காற்றில் பரவுவதை கவனித்தோம் என ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானி நவீத் ஹூஷாங்கிநெஜாத் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பின், ஆய்வுக்குழு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெங்காயங்களை பல மாதங்களாக நறுக்கி, உயர் வேக கேமராவில் அந்த செயல்முறையை பதிவு செய்தது.
கத்தி எவ்வளவு கூர்மையானது அல்லது மந்தமானது, எவ்வளவு வேகத்தில் நறுக்கப்படுகிறது என்பதையெல்லாம் ஒப்பிட்டு, எந்த முறையில் கண்ணீர் குறைவாக வருகிறது என்பதை ஆராய்ந்தனர்.
வேகமாக நறுக்கும்போது, கத்தியில் அதிக கைனெடிக் சக்தி உருவாகி, வெங்காய சாறு துளிகள் வேகமாக காற்றில் பறக்கின்றன.
மந்தமான கத்தி பயன்படுத்தினால், வெங்காயத்தின் அடியில் அதிக அழுத்தம் உருவாகி, பெரிய அளவு சாறு திடீரென பீறிட்டு வெளிவந்து கண்ணில் புகும் வாய்ப்பு அதிகமாகிறது.
ஆனால் கூர்மையான கத்தி பயன்படுத்தி மெதுவாக நறுக்கினால், சாறு வெளியேறுவது குறைந்து, கண்ணீர் வருவது மிகக் குறையும்.
வெங்காயத்தின் அளவு, அடுக்கு எத்தனை நீக்கப்பட்டுள்ளன, எது முதல் எது வரை நறுக்கப்படுகிறது போன்ற அம்சங்களும் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவை இன்னும் ஆராய்ச்சியில் உள்ளன என விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.
கூர்மையான கத்தியைப் பயன்படுத்தி, மெதுவாக வெங்காயம் நறுக்குங்கள். அப்போது கண்ணீர் வராது.