செல்லப்பிராணியால் சிக்கலில் மாட்டிய கனடிய குடும்பம்! ஓநாயா! நாயா என கேள்வி
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள சட்பரி நகரைச் சேர்ந்த ஹெவன் ஃபுரோரி என்பவரின் குடும்பம், தங்களது செல்லப் பிராணியான 'ஆனிக்ஸ்' என்ற நாயைக் காப்பாற்றக் கடுமையான சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது.
ஆனிக்ஸ் என்பது 6 வயதான 'வோல்கா வோல்ஃப்ஹவுண்ட்' வகை நாயாகும். 2020-இல் இதை வாங்கியபோது, இது ஒரு தூய்மையான ஓநாயின் மரபணுவிலிருந்து 14 தலைமுறைகள் தள்ளியிருக்கும் ஒரு நாய் என்று இதைப் விற்றவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், ஒன்ராறியோ மாகாணத்தின் 'மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்' படி, ஓநாய்களும் அவற்றின் கலப்பினங்களும் வனவிலங்குகளாகவே கருதப்படுகின்றன. வனவிலங்குகளை வீடுகளில் செல்லப் பிராணியாக வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.

ஒன்ராறியோவின் இயற்கை வளங்கள் அமைச்சு மரபணு சோதனை நடத்தி ஆனிக்ஸ் ஒரு ஓநாய் கலப்பினம் என்பதை உறுதி செய்தது. எனினும், ஆனிக்ஸ் மிகவும் அன்பானவன், யாரிடமும் வன்முறையாக நடந்துகொண்டதில்லை எனஉரிமையாளர் ஹெவன் ஃபுரோரி கூறியுள்ளார்.
நாங்கள் அவனுடன் மற்ற இரு நாய்களையும் இரு குழந்தைகளையும் வளர்த்து வருகிறோம் எனவும் வீட்டுக்குள் வாழும் ஒரு சாதாரண நாய், குறித்த நாயை வனவிலங்கு எனப் பிரிக்கிறார்கள் என வேதனையுடன் கூறியுள்ளார்.
அமைச்சகம் அளித்த ஒரு மாத கெடுவில், ஆனிக்ஸை ஓநாய் சரணாலயத்திற்கு அனுப்ப முடியுமா என ஹெவன் விசாரித்தார். ஆனால், அங்கு இட நெருக்கடி இருப்பதோடு, வீட்டுச் சூழலில் வளர்ந்த இந்த நாயால் காட்டு ஓநாய்களுடன் இணைந்து வாழ முடியாது எனச் சரணாலய நிர்வாகம் மறுத்துவிட்டது.
இதனால் ஆனிக்ஸை கருணைக்கொலை செய்ய வேண்டிய அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, தனது செல்லப் பிராணியைக் காப்பாற்ற இணையம் வழியாக நிதி திரட்டி வழக்கறிஞர் ஒருவரை ஹெவன் நியமித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆனிக்ஸிற்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அமைச்சிடமிருந்து தனது நாயை மீட்பதற்கான சட்டப் போராட்டத்தை இக்குடும்பம் தொடர்ந்து வருகிறது.