திருமண வீட்டில் தற்கொலை குண்டு தாக்குதல்; அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் டெரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் தற்கொலைப்படைத் தாக்குதல் இடம்பெற்றதில் குறைந்தது 7 பேர் உயிரிழந்ததுடன், 25-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல், கிளர்ச்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு தரப்பு சமாதானக் குழுவின் தலைவராக செயல்பட்டு வரும் நூர் ஆலம் மெஹ்சூத் என்பவரின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (23) இரவு நடைபெற்ற திருமண நிகழ்வின் போது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துயரத்தில் முடிந்த சம்பவம்
திருமண விழாவில் விருந்தினர்கள் இசைக்கு நடனமாடிக் கொண்டிருந்த சமயத்தில், மர்ம நபர் ஒருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெடிப்பு மிகுந்த சக்தியுடன் நிகழ்ந்ததனால், வீட்டின் ஒரு பகுதி மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது வெடிப்பில் காயமடைந்தவர்கள் மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெரா இஸ்மாயில் கான் மாவட்ட பொலிஸ் அதிகாரி அத்னான் கான் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்த அமைப்பும் ஏற்றுக்கொள்ளவில்லை.
TTP அமைப்பின் நடவடிக்கைகள்
அண்மைக் காலங்களில் பாகிஸ்தானில் பல தாக்குதல்களை மேற்கொண்டுவரும் பாகிஸ்தான் தலிபான் (Tehrik-e-Taliban Pakistan – TTP) அமைப்பினர் இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என பாதுகாப்புத் தரப்பினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் பின்னர், அங்கு ஆப்கான் தலிபான் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், TTP அமைப்பின் நடவடிக்கைகள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல TTP தலைவர்கள் மற்றும் போராளிகள் ஆப்கானிஸ்தானில் தஞ்சம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.