கனடா மாகாணம் ஒன்றில் தொடரும் தற்கொலைகள்... அவசர நிலை அறிவிப்பு

Balamanuvelan
Report this article
கனடாவின் மனித்தோபா மாகாண பூர்வக்குடியினர் வாழும் பகுதியில் ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டார். அவரைப் பின்தொடர்ந்து 7 வயது சிறுமி ஒருத்தி தற்கொலைக்கு முயன்றுள்ளாள்.
இம்மாதம் (மே மாதம்) 9ஆம் திகதி, நான்கு குழந்தைகளுக்குத் தாயான ஒரு 32 வயது பெண் தற்கொலை செய்துகொண்டார். நேற்று முன் தினம் இரவு 7 வயது சிறுமி ஒருத்தி தற்கொலைக்கு முயன்றதைத் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள்.
அந்த 32 வயது பெண், மனித்தோபாவிலுள்ள Shamattawa என்னும் பூர்வக்குடியினரின் தலைவரான Eric Redhead என்பவரது சகோதரி ஆவார். கொரோனா தொடங்கியதிலிருந்து தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் Eric.
எங்கள் பகுதியில் ஒரு தற்கொலை நடந்தால் போதும், அவ்வளவுதான், வரிசையாக தற்கொலைகள் தொடரும் என்கிறார் Eric. இந்த தற்கொலைகளைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ளூர் அவசர நிலை பிறப்பித்துள்ளார் Eric.
கனடா சுகாதாரத்துறையின் அவசர உதவியைக் கோரியுள்ள Eric, குறிப்பாக குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினருக்கு மன நல உதவி வேண்டும் என கோரியுள்ளார்.
பொதுவாகவே பூர்வக்குடியினர் வாழும் குடியிருப்புகள் வறுமையால் வாடும் நிலையில், தற்கொலை பிரச்சினைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கொரோனாவால் உருவாகியுள்ள தனிமை மற்றும் இழப்புகள் காரணமாக நிலைமை மோசமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது