இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு அழைப்பாணை
ரோயல் பார்க் கொலை வழக்கில் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று (11) அழைப்பாணை அனுப்பியுள்ளது.
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு
அதைத் தொடர்ந்து, ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி, அவரை தண்டிக்காததற்கான காரணங்களை முன்வைக்குமாறு மைதிரிக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஆண்டு வழங்கப்பட்டபோது, அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த மனு இன்று (11) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, மைத்திரிபால சிறிசேன இன்றுவரை அந்தத் தொகையை செலுத்தவில்லை என்று தெரிவித்தார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகி, காரணத்தை முன்வைக்குமாறு கோரி அழைப்பாணை அனுப்பப்பட்டது.