விண்வெளியில் சிக்கியுள்ள சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்கு திரும்புவார்? நாசா கூறுவது என்ன?
சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் 2025 ஆம் ஆண்டுதான் பூமிக்கு திரும்புவர்கள் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
இவர்கள் கடந்த மாதம் 5-ம் திகதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர்கள் திட்டமிட்டபடி கடந்த 22ம் திகதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டியிருந்த நிலையில் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சினையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் சிக்கியுள்ளனர். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.
இந்நிலையில், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாங்கள் இங்கிருக்கும் குழுவினருடன் ஒருங்கிணைந்து பணியாற்றி வருகிறோம். நிறைய பணிகள் உள்ளன என்று சுனிதா வில்லியம்ஸ் சமீபத்திய காணொளி சந்திப்பின்போது செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும் வீட்டிற்குத் திரும்பி வரவேண்டும் என்ற உணர்வு உள்ளது. அதே நேரத்தில், இங்கு இவ்வாறு சுற்றி மிதப்பது நன்றாக இருக்கிறது.
விண்வெளியில் இருப்பது மற்றும் இங்கிருக்கும் சர்வதேச விண்வெளி நிலையக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று சுனிதா வில்லியம்ஸ் கூறியுள்ளார்.