இரும்பை போன்று பத்து மடங்கு வலிமையான பலகை கண்டு பிடிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த இன்வென்ட்வுட் (InventWood) என்ற நிறுவனம், உருக்கை விடவும் 10 மடங்கு வலிமையையும் ஆறு மடங்கு நெகிழ்வுத்தன்மையையும் கொண்ட ஒரு புதிய வகை பலகையை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த "சூப்பர்வுட்" என்று அழைக்கப்படும் புதிய பலகை, வணிக ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புரட்சிகரமான மரத்தை உருவாக்கியவர், மெட்டீரியல் அறிவியலாளர் லியாங்பிங் ஹூ (Liangbing Hu) என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் தற்போது யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். ஒரு தசாப்தத்திற்கு முன்பு, மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மெட்டீரியல்ஸ் இன்னோவேஷன் மையத்தில் பணிபுரிந்தபோது, பலகையை மறு-பொறியியல் செய்யும் முயற்சியை ஹூ தொடங்கினார்.
மரத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றான லிக்னினை (மரத்திற்கு நிறத்தையும், வலிமையையும் அளிக்கும் பொருள்) அகற்றி, பலகையை வெளிப்படையாக்குவது உள்ளிட்ட புதுமையான முறைகளை அவர் கண்டறிந்தார். ஆனால், ஹூவின் உண்மையான நோக்கம், மரத்தை மிகவும் வலிமையாக்குவதாக இருந்தது.
இதற்காக, செல்லுலோஸ் (தாவர இழைகளின் முக்கிய கூறு மற்றும் "பூமியில் மிகவும் அதிகமாகக் கிடைக்கும் உயிரி-பாலிமர்") என்ற பொருளைப் பயன்படுத்தினார். 2017ஆம் ஆண்டு, ஹூவின் ஆராய்ச்சி ஒரு முக்கிய திருப்புமுனையை எட்டியது.
வழக்கமான பலகையை வேதியியல் முறையில் செயலாக்கி, அதன் இயற்கையான செல்லுலோஸை மேம்படுத்துவதன் மூலம், பலகையை வலிமையான கட்டுமானப் பொருளாக மாற்றினார்.
மரத்தை முதலில் தண்ணீர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேதிப்பொருட்களுடன் கொதிக்கவைத்து, பின்னர் உயர் வெப்பநிலையில் அழுத்தி, செல்லுலார் மட்டத்தில் சுருக்கி, அதை மிகவும் அடர்த்தியாக்கினார்.
ஒரு வாரம் நீடிக்கும் இந்த செயல்முறையின் முடிவில், பெறப்பட்ட பலகை, "பெரும்பாலான கட்டமைப்பு உலோகங்கள் மற்றும் உலோகக் கலவைகளை விட" உயர்ந்த வலிமையைக் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது.