சீன நபரின் இதயம், சிறுநீரகத்தில் தையல் ஊசி; அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்
சீனாவில் சிறுநீரகத் தொற்று மற்றும் சிறுநீரில் இரத்தம் வெளியேறும் பிரச்சனையுடன் மருத்துவமனைக்குச் சென்ற 35 வயது நபர் ஒருவரின் இதயத்தில் 36 மி.மீ நீளமுள்ள தையல் ஊசி ஒன்று புதைந்திருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சீனருக்கு அறிவுசார் குறைபாடு உள்ள நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சி.டி பரிசோதனையில் இதயத்தைத் தவிர வயிற்றுப் பகுதி, இடுப்பு எலும்பு, சிறுநீர்ப்பை மற்றும் ஆணுறுப்பு உள்ளிட்ட பல இடங்களிலும் உலோகப் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

உடலின் பல இடங்களிலும் உலோகப் பொருட்கள்
இதயத்தைச் சுற்றியுள்ள பாதுகாப்புப் பையைத் துளைத்துக்கொண்டு அதன் கூர்மையான முனை இடது வென்ட்ரிகிளுக்குள் சென்று இதயத்துடிப்போடு சேர்ந்து இயங்கி வந்த அந்த ஊசியை அகற்ற மருத்துவர்கள் உடனடியாகச் அறுவை சிகிச்சை செய்தனர்.
மேலும், அவரது சிறுநீர்ப்பையில் நீண்ட நாட்களாக இருந்திருக்கக் கூடிய மற்ற ஊசிகளையும் மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர்.
சிகிச்சைக்குப் பின் அவர் நலம் பெற்றுள்ள போதிலும், இந்த ஊசிகள் அவரது உடலுக்குள் எப்படிச் சென்றன என்பது குறித்து அவராலோ அல்லது அவரது குடும்பத்தினராலோ எந்தத் தெளிவான விளக்கமும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது.